Wednesday, 17 October 2012

நவராத்திரி-3

இன்று துர்க்கா விரதத்தின் இறுதி நாள்...அதனால் சொல்லவிரும்புவதையெல்லாம் சொல்லி துர்க்காவிடம் கேட்கவிரும்புவதையெல்லாம் இன்றே கேட்டுமுடித்துவிடலாம் என்று இருக்கிறேன்..:)

வார்த்தைகளில் நான் கோர்க்க நினைக்கும் அன்பை வேண்டுதலை என் தாய் புரிந்துகொள்வாள் என்று நம்புகிறேன்..:))

வீரத்தின் திருவுருவாய் அமர்ந்தவளே துர்க்கையம்மா
அஞ்ஞான இருள் அகற்றும் அருள்விளக்கு நீயம்மா
விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டையும் கடந்தவளே
பொய்யான வாழ்விதன் பொருளெனக்கு உணர்த்துவாயே

விதியென்று வந்திட்ட வாழ்வது இது
கதியென்று நாம் தேட நின்பதமல்லால் வேறேது
கலி என்ற பிணி நீங்க வழியிங்கு எமக்கேது
காலமெல்லாம் நின்கருணை அல்லாது வாழ்விங்கேது

தாயே!

மன்னுயிர் துயர்கண்டு துடித்திடும் மனம் வேண்டும்
மேன்மைசேர் பண்பு மனத்தகத்தே என்றும் வேண்டும்
பேதையர் தம் பழிச்சொற்கு பணியாத திடம் வேண்டும்
பெருங்கனம் கொள்ளாத சிரசதுவும் எனக்கு வேண்டும்
வஞ்சம் எதுவுமற்ற பிஞ்சு மனம் வேண்டும்
வாடிச்சோரும் போதினிலே வழிகாட்ட நீவேண்டும்
மாதரசி நினைப்பாட மாசிலா வார்த்தை வேண்டும்
மாதா உன் பெருங்கருணை எப்போதும் உடன் வேண்டும்

இத்தனையும் தருவாய் என் தாய் நீயே
அத்தனை உயிர்கட்கும் அன்னை நீயே

No comments:

Post a Comment